பெரியாருக்கு சினிமா பிடிக்காது.
‘சினிமா இந்த நாட்டைப் பிடித்த நோய்’ என்று சாடியவர். அப்பேர்பட்ட பெரியார் ஒரு திரைப்படத்தின் விழாவில் ஆர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் கலந்து கொண்டு அனைவரையும் பாராட்டி பரிசளித்திருக்கிறார் என்றால் அப்படிப்பட்ட படத்தை நான் பார்த்தே ஆக வேண்டும் என்று நேற்று இணையதளத்தில் தேடியதில் யூட்யூபில் கிடைத்தது .அந்த படத்தின் பெயர் ‘சூரியகாந்தி’
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் தந்தை பெரியாரும் சந்தித்துக் கொண்ட ஒரே நிகழ்ச்சி அதுதான். ராதா என்ற பெண் கதாபாத்திரமாக மிக சிறப்பாக நடித்த ஜெயலலிதா அவர்களை மிகவும் பாராட்டி மகிழ்ந்தார் பெரியார்.

‘சூரியகாந்தி’ பட விழாவில் பெரியார் கலந்து கொள்ள சம்மதித்ததற்கு காரணம் உண்டு. திரைப்படம் நாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.வேலைக்கு சென்று அதிகம் சம்பாதிக்கும் மனைவி, தாழ்வு மனப்பான்மை கொண்ட கணவனால் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர் கொண்டு நிமிர்ந்து நின்று வெற்றி பெறுவதுதான் கதை.
ஒரு நடுத்தர குடும்பத்தை நிர்வகிக்கும் நல்ல அப்பாவாக மேஜர் சுந்தர்ராஜன், தாழ்வு மனப்பான்மை கொண்ட இளைஞராக இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய முத்துராமன், பணத்தை ஆசை பிடித்திருந்தாலும் அதை நேர்வழியில் மட்டும் சம்பாதிக்க நினைக்கும் நேர்மையான சம்மந்தியாக MRR வாசு, கணவனை இழந்து சமூகத்தின் கொடூர கோரப் பார்வையிலிருந்து தப்பிக்க பொய் வேடம் போட்டு சமாளிக்கும் பார்ப்பன பெண்ணாக கச்சிதமான நடிப்பில் மனோரமா மற்றும் புதுமுகங்களாக முத்துராமனின் தங்கையை காதலிக்கும் இளைஞர் மொளலி இன்றும் பல பெயர் தெரியாத நடிகர்கள் அத்துணை பேரும் இயல்பான நடிப்பில் வெளுத்து வாங்கி இருப்பார்கள். நடிப்பில் கூடியும் இல்லாமல் குறையவும் இல்லாமல் ராதா என்னும் பெண் கதாபாத்திரத்தில் மிக அழகாகவும் அபாரமாகவும் தன் நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது ஜெயலலிதா என்றால் மிகை இல்லை.
ஆணாதிக்கத்தை எதிர்க்கும் விதமாகவும் ஒரு பெண்ணுக்கு கல்வியின் அவசியத்தைப் பற்றியும் அந்தக் கல்வியால் அந்த பெண் பொருளீட்டி உயர்ந்த நிலைக்கு வந்து குடும்பத்தையும் நிறுவனத்தையும் நிர்வகிக்கும் திறமையையும் அழகாக படம் பிடித்து காட்டிய திரைப்படம்தான் சூர்ய காந்தி.
படப்பிடிப்பு முடித்து வெளியிட தயாராக இருந்தபோதே ‘பெண்களுக்கு சமூக விடுதலை வேண்டுமானால் அவர்களுக்கு பொருளாதார விடுதலை வேண்டும்’ என்று குரல் கொடுத்த பெரியார்,பெண்ணுரிமையை வலியுறுத்தும் ‘சூரியகாந்தி’ பட விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் முக்தா சீனிவாசன்.
படத்தின் கதையை மட்டும் கூறி பரிசளிப்பு விழாவுக்கு அழைத்தது அந்தப் படத்தை இயக்கிய முக்தா சீனிவாசன் என்னும் ஒரு பார்ப்பனர் என்பது கூடுதல் வியப்பு.
அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் நடந்த விழாவில், ஜெயலலிதா, முத்துராமன், முக்தா சீனிவாசன் உட்பட படத்தில் பங்களிப்பு செய்த கலைஞர்களுக்கு விருது வழங்கி பெருமைப்படுத்தினார் பெரியார். அவர் கலந்து கொண்ட ஒரே சினிமா விழா இதுதான்.


